விவசாயம்
விழுப்புரம் மாவட்டத்தில் 75% மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 722203 எக்டரில் 337305 எக்டரை (45%) சாகுபடி பரப்பாகக் கொண்டுள்ளது. இதில் 137647 எக்டர் பரப்பளவில் ஒருமுறைக்கு மேல் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பயிர் சாகுபடி திறன் அதாவது மொத்த சாகுபடி பரப்பிற்கும் நிகர சாகுபடி பரப்பிற்கும் உள்ள விகிதம் 1.40 ஆகும். இது நமது மாநில சராசரி (1.25)ஐ விட அதிகமாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 5.68 லட்சம் பண்ணை குடும்பங்கள் உள்ளன. 75% குறு விவசாயிகள், 16% சிறு விவசாயிகள் மற்றும் 9% பிற விவசாயிகள் முறையே 33, 25 மற்றும் 42% நிலப்பரப்பினை கொண்டுள்ளனர். பிற விவசாயிகளின் நிலப்பரப்பு மாநில அளவில் சுமார் 34% மட்டுமே உள்ளது.
மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் விளங்குகின்றன. நிகர நீர்பாசனப் பரப்பு சுமார் 2.43 இலட்சம் எக்டராக உள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 33.6% மற்றும் நிகர சாகுபடி பரப்பில் 72% ஆகும். இம்மாவட்டத்தில் வீடூர், கோமுகி மற்றும் மணிமுத்தா அணைக்கட்டு மூலம் 18553 ஏக்கர் பரப்பிலும், சாத்தனூர் அணைக்கட்டு மூலம் 35000 ஏக்கர் பரப்பிலும் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்டத்தின் சராசரி மழையளவு 1060 மி.மீ.. இதில் வடகிழக்கு பருவமழை மூலம் மட்டும் 638 மி.மீ (60%) மழை கிடைக்கப்பெற்றுள்ளது.
நெல் இம்மாவட்டத்தின் பிரதான பயிராக விளங்குகிறது. சொர்ணவாரி, சம்பா மற்றும் நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் பயிரிடப்படுகிறது. மொத்த பயிர் சாகுபடி பரப்பில் 40% நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல்லுக்கு அடுத்தபடியாக பயறுவகை பயிர்கள் இம்மாவட்டத்தில் முக்கிய உணவுதானிய பயிராக விளங்குகிறது. அதில் உளுந்து 80% சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு இம்மாவட்டத்தின் முக்கிய பணப்பயிராகும். இம்மாவட்டத்தில் உள்ள 7 கரும்பு ஆலைகளுக்கு முழுமையாகவும் மற்றும் பிற மாவட்டத்தில் உள்ள 5 சர்க்கரை ஆலைகளுக்கு பகுதி அளவிலும் கரும்பு வழங்கப்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தின் சர்க்கரை கிண்ணமாக விளங்குகிறது.
மாநில உணவு தானிய உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. 2013-14ஆம் ஆண்டு முதல் 2017-18 வரை தொடர்ந்து இம்மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில உற்பத்தியில் இம்மாவட்டத்தின் பங்களிப்பு 10 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது.
பயறுவகை பயிர் உற்பத்தியில் உற்பத்தி திறனில் மாநில அளவில் 850 கிலோ சராசரி மகசூல் பெற்று முதலிடத்தில் உள்ளது. 2013-14ம் ஆண்டு தேசிய அளவில் பயிர் அறுவடை பரிசோதனை மகசூல் அடிப்படையில் ஒரு எக்டருக்கு 1792 கிலோ விளைவித்து சாதனை செய்த திருமதி.விசாலாட்சி, க/பெ.வேலு, கொந்தமூர், வானூர் வட்டாரம் அவர்களுக்கு தேசிய விருதான கிரிஷி கர்மான் விருது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்ட விவசாயிகள் மாறிவரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்குவதால், வேளாண் உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் எப்போதுமே முன்னோடி மாவட்டங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும், அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தும் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிர்கொள்கிறது. விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவர்களுடைய பொருளாதார நிலைமையை மேம்படுத்த, ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவலாக்கல் தொழில்நுட்பங்களுடன் கூடுதலாக தீவிரமான ஒருங்கிணைந்த வேளாண்மை (NMSA) , பயனற்ற நில மேலாண்மை திட்டம், நீடித்த வறட்சி நில வேளாண்மை, கூட்டுப்பண்ணையம், விரிவான நீர்வடி நிலப்பகுதி வளர்ச்சி செயல்பாடுகள், நுண்ணீர்பாசனம் மூலமாக நீர் மேலாண்மை, பசுமை உரங்கள், உயிர் உரங்கள் மூலம் மண் வளம் வளர்ச்சி, நீடித்த கரும்பு விவசாய வளர்ச்சி முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை, ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை மேற்கொள்ளல் (INM), ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM), போன்ற தொழில்நுட்பங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள்
அரசு விதைப்பண்ணை – காகுப்பம், இருவேல்பட்டு, வடக்கனந்தல் மற்றும் வானூர்
கருவிதைகள் மற்றும் ஆதார விதைகளைக் கொண்டு விதைப்பண்ணை அமைத்து விதைப்பெருக்கம் செய்து, வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்து விவசாயிகள் நிலங்களில் விதைப்பண்ணை அமைத்து சான்று விதைகளை பெருக்கம் செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தரமான சான்றுபெற்ற விதைகளை விநியோகம் செய்வதே அரசு விதைப்பண்ணைகளின் நோக்கமாகும். நெல், மணிலா, உளுந்து, பச்சைப்பயறு, கம்பு, ராகி மற்றும் எள் ஆகிய பயிர்களுக்கான விதைப்பண்ணைகள் அரசு விதைப்பண்ணைகளில் அமைக்கப்படுகிறது.
தென்னை ஒட்டுப்பணி மையம், மரக்காணம்
விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தரமான நெட்டை X குட்டை தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்குவதே தென்னை ஒட்டுப்பணி மையத்தின் நோக்கமாகும்.
திரவ உயிர் உர உற்பத்தி மையம், முகையூர்
அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரம்), ரைசோபியம் (பயறுவகைகள்), ரைசோபியம் (நிலக்கடலை), மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் திரவ நிலையில் உற்பத்தி செய்து விவசாயிளுக்கு வழங்கி, இரசாயன உரங்கள் பயன்படுத்துவதை குறைத்து மண்வளத்தை மேம்படுத்துவதே திர உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தின் நோக்கமாகும்.
உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி மையம், விழுப்புரம்
டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ் ப்ளூரசன்ஸ், கிரீன் மஸ்கார்டைன் பூஞ்சான், ப்ளூரோட்டஸ், டிரைகோகிரம்மா கிலோனிஸ் மற்றும் என்பிவி ஆகிய உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி, இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதை குறைத்து விவசாயிகளின் உற்பத்தி செலவை குறைப்பதே உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி மையத்தின் நோக்கமாகும்.
உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், விழுப்புரம்
தரமான உரங்கள் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கலப்பு உரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உர விற்பனை மையங்களில் இருந்து உர மாதிரிகள் எடுத்து உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமற்ற உரங்கள் விவசாயிகளை சென்றடைவது தடுக்கப்பட்டு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது.
மண் பரிசோதனை நிலையம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம், விழுப்புரம்
வலை சட்ட முறையில் மண்மாதிரிகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டு மண்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் விவசாயிகளின் வயலுக்கே சென்று மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண் ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வின் முடிவறிக்கையின்படி மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவின்படி பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்கள் பயன்படுத்துவதனால் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதோடு ரசாயன உரங்கள் பயன்பாடு குறைந்து உற்பத்தி செலவினமும் குறைகிறது.
உழவர் பயிற்சி நிலையம், திண்டிவனம்
தொழில்நுட்பம் சார்ந்த கிராம அடிப்படையிலான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விழுப்புரம்
ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியினை குறைத்து ஒரு பாலமாக செயல்பட்டு தொழில்நுட்பங்களை செயல் விளக்கங்கள், பயிற்சிகள் மற்றும் கண்டுணர் சுற்றுலா மூலம் விவசாயிகளுக்கு எடுத்துச்செல்வதே இதன் நோக்கமாகும்.
திட்டங்கள்
தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துச் சென்று வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்காக பல்வேறு திட்டங்கள் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு சார்பு திட்டங்கள்
- தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் (NADP) -நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு மற்றும் பசுந்தாள் உரம் மூலம் மண்வளத்தை மேம்படுத்துதல்.
- தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்கள் (NFSM) – பயறுவகைகள், சிறுதானியங்கள், வணிக பயிர்கள், சத்தான சிறுதானியங்கள், எண்ணெய்வித்துக்கள், எண்ணெய்பனை மற்றும் மரவகை எண்ணெய்வித்துக்கள்
- தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் (NMSA) – ஒருங்கிணைந்த பண்ணையம்
- தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்
- விதைக்கிராம திட்டம் – நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் சான்று விதை விநியோகம்
- பாரம்பரிய வேளாண்மை சாகுபடி திட்டம் ( PKVY)
- பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் (PMKSY)
மாநில அரசு சார்பு திட்டங்கள்
- தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் ( TNCCM )
- நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கம் (MSDA) – மானாவாரி சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் பருத்தி
- கூட்டுப்பண்ணையம் – உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல்
- விதைப்பெருக்குத்திட்டம் – தமிழ்நாடு விதை மேலாண்மை முகமை
மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவி பெறும் திட்டம்
- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் (PMFBY)
மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகளின் கைபேசி எண்கள்
வ. எண் | பதவி | கைபேசி எண் |
---|---|---|
1. | வேளாண்மை இணை இயக்குநர் | 7550215480 |
2. | வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) | 7550215483 |
3. | வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) | 7550215484 |
4. | வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) | 7550215482 |
5. | வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) | 7550215485 |
6. | வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு) | 7550215486 |
வ.. எண் | வட்டாரம் | தொலைபேசி எண் | கைபேசி எண் |
---|---|---|---|
1. | கோலியனூர் | 04146-231314 | 7550215487 |
2. | காணை | 04146-234355 | 7550215488 |
3. | கண்டமங்கலம் | 0413-2644200 | 7550215489 |
4. | விக்கிரவாண்டி | 04146-233020 | 7550215490 |
5. | வானூர் | 0413-2671020 | 7550215491 |
6. | ஒலக்கூர் | 04147-238257 | 7550215493 |
7. | மயிலம் | 04147-237525 | 7550215495 |
8. | மரக்காணம் | 04147-239367 | 7550215492 |
9. | செஞ்சி | 04145-222121 | 7550215496 |
10. | வல்லம் | 04145-235251 | 7550215498 |
11. | மேல்மலையனூர் | 04145-234203 | 7550215497 |
12. | முகையூர் | 04153-224116 | 7550215501 |
13. | திருவெண்ணைநல்லூர் | 04153-234177 | 7550215504 |
மேலும் தொடர்புக்கு
வேளாண்மை இணை இயக்குநர்,
பெருந்திட்ட வளாகம்
விழுப்புரம்
அலுவலக தொலைபேசி எண். – 04146 222291